Monday, November 29, 2010

களிமண் - அத்தியாயம் 2

ஆலயம் நிர்மாணிக்கும் பணிக்காக ஸ்தபதி கல்லில் சிற்ப வேலைப்பாடுகள் செய்யும் சிற்பிகள் சிலரையும், சுதை எனும் மண் கலவையினாலான சிற்ப வேலைப்பாடுகள் செய்யும் கலைஞர்கள் சிலரையும், பணியில் உதவிக்கு வேறு சில பணியாளர்களையும் கும்பகோணத்திலிருந்து வரவழைத்தார்.

ஆலயப்பணி தொடங்கிய நாள்முதலாகவே அவ்வூர்ச் சிறுவர்கள் திருப்பணி நடக்கும் தலத்தைச் சுற்றிச்சுற்றி வந்தனர்.

அவர்களில் முன்னணியில் நின்றவன் நம் குணா. சிறுவர்கள் மட்டுமல்லாது ஊரிலுள்ள ஆண்களும் பெண்களும்கூட தமது ஓய்வு நேரத்தில் திருத்தலத்தை அடைந்து அங்கிருந்த நெடிதுயர்ந்த நிழல்தரும் மரங்களின் அடியில் சற்றே அமர்ந்து அளவளாவிடிட்டுப், பின்னர் தம் இல்லம் திரும்புவது வழக்கமாயிற்று. காவிரியாற்றில் தண்ணீர் பாயும் காலம் இன்னமும் வரவில்லையாதலால் மக்களுக்கு அதிகப் பணிகள் இன்றி நிறைய ஓய்வு நேரம் இருந்தது. அதனால் அவர்கள் ஆலயம் அமையவிருக்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர். மொத்தத்தில் ஆலயத் திருப்பணி நடப்பது ஊர் மக்களனைவருக்கும் பெரும் புத்துணர்ச்சியளிப்பதாக அமைந்தது.

தான் இதுவரை வேளியூர்களிலுள்ள சில ஆலயங்களிலும், காலண்டர்களிலும், அவ்வூரிலிருத்த திரையரங்கில் திரையிடப்பட்ட பேசும்படங்களிலும் மட்டுமே பார்த்த தெய்வ உருவங்கள் பல தன் கண்முன்னரே கல்லினாலும் மண்ணின் கலவையாலும் உருவாவதைக் கண்ட குணா வாழ்வில் இதுவரை கண்டிராத பேரின்பம் நெஞ்சில் பொங்கிப் பெருகும் பரவசத்தை உணர்ந்தான். அவனது உள் மனதில் தன் வாழ்க்கைப்பாதை தெய்வத்திரு உருவங்களுடன்தான் தான் அமையப் போகிறதென்று தோன்றியது; அதே நேரத்தில் ஆற்றங்கரைக் கோவில் மணி அடிக்கும் ஒலி கேட்க, பக்திப் பரவசத்தில் குணா தன் நிலை மறந்தான்.

அங்கு வரும் பிற சிறுவர்களனைவரும் திருப்பணி நடைபெறுவதைச் சற்று நேரம் பார்வையிட்ட பின் மற்ற நேரம் மரங்களின் நிழலில் ஓடிப்பிடித்து விளையாடிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கையில் குணா மட்டும் வைத்த கண் வாங்காமல் தெய்வத் திரூஉருவச் சிலைகள் மற்றும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் கற்களும் உருவாவதைப் பார்த்துக் கொண்டிருப்பதில் பெரும்பான்மையான நேரத்தைக் கழிப்பதைக் கண்ட ஸ்தபதி அவன் மேல் மிக்க அன்பு கொண்டு அவனுடன் சகஜமாகப் பேசிப்பழகினார்.

"ஐயா, கற்சிலைகளையும் மண் கலவையினாலான திருவுருவங்களையும் மட்டுமே செய்கிறீர்களே, எங்கள் ஊர்க் கோவிலுக்கு வெண்கலச் சிலைகள் கிடையாதா?" என்று நடராஜர் மற்றும் வெண்கலத்தினாலும் ஐம்பொன்னாலும் உருவாக்கப்பட்ட விக்கிரஹங்களை மனதில் கொண்டு கேட்க ஸ்தபதி, "உண்டு குணா, உங்கள் ஊர் ஆலயத்திற்கும் வெண்கலச் சிலைகள் கும்பகோணத்தில் செய்யப்படுகின்றன. அவை திருப்பணி முடிவடையும் தருவாயில் கொண்டு வரப்படும்." என்றார். தம்பி, "இங்கு வரும் எல்லாச் சிறுவர்களும் பெரும்பாலும் விளையாட்டில் நேரத்தைச் செலவிடும்போது நீ மட்டும் சிற்பங்கள் வடிப்பதை ஆர்வத்துடன் பார்க்கிறேயே, உனக்கு சிற்பக் கலையின் மேல் அவ்வளவு ஈடுபாடா?" என ஸ்தபதி குணாவைக் கேட்க, அந்நேரத்தில் அங்கு வந்த வேறு சிறுவன் ஒருவன், "ஐயா, குணாவுக்கு களிமண்ணால் பொம்மைகள் செய்வதைத் தவிர வேறொன்றும் தெரியாது, அவன் மண்டையிலும் களிமண்தான் உள்ளது." என்று நையாண்டியாகக் கூறிவிட்டு அவரது மறுமொழியைக் கேட்கக்கூடக் காத்திராமல் ஓடி விட்டான்.

தொடரும் ....

Sunday, November 28, 2010

களிமண் - அத்தியாயம் 1

"ஏண்டா, உன் மண்டையிலென்ன இருக்கு? களிமண்ணா இருக்கு? எதைக் கேட்டாலும் பேந்தப் பேந்த முழிக்கறயேடா, இஞ்சி தின்ன குரங்கு போல, நீ எப்படா உருப்படப் போறே?"
ஆசிரியர் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் மௌனத்தையே பதிலாய்த் தந்துவிட்டு மரம் போல் நின்றான் குணசீலன் என்ற குணா. அவன் பெயர் என்னமோ நல்ல பெயர்தான், அவன் குணமும் பெயருக்கேற்றாற் போல் நற்குணம் தான்,

இருப்பினும் "மக்குராஜா" என்று எல்லோரும் கேலியாக அழைக்குமளவிற்கு குணா படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தான். அவன் மண்டையில் களிமண் இருந்ததோ இல்லயோ, அவன் வீட்டைச் சுற்றி நிறையக் களிமண் இருந்தது. அந்தக் களிமண்ணில் தண்ணீர் சேர்த்துக் குழைத்து அதனால் பல பொருட்களை உருவாக்குவது குணாவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு.

தஞ்சை மாவட்டத்தில் காவேரி ஆற்றுப் படுகையிலிருந்த கிராமமொன்றில் குணா, அவனது தந்தை ராமு, தாய் சீதா, மற்றும் அவன் உடன்பிறப்பான தங்கை மல்லிகா ஆகியோர் வசித்து வந்தனர். ராமு "அன்றாடங்காய்ச்சி" இனத்தைச் சேர்ந்த மண் "வெட்டிக் கூலி தின்னலாச்சே" எனும் மஹாகவி பாரதியாரின் சொற்களுக்கேற்ப ஒரு விவசாயத் தொழிலாளி. சீதாவும் முடிந்த போது நாற்று நடுதல், களையெடுத்தல், அறுவடை முதலிய விவசாயக் கூலித் தொழிலையே செய்துவந்தாள்.

காவேரி ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் இல்லாவிட்டால் இல்லை. தண்ணீர் வந்து பயிரிட்டும் பல முறை அதன் பின்னர் பருவம் தவறிப் பெய்யும் கனமழையால் முளைத்த பயிர்கள் முக்காலே மூணுவீசம் அழுகிவிடும். இப்படி வாழ்க்கைப் போராட்ட வெள்ளத்தில் மூழ்கி வெளிவர முடியாமல் தவிக்கும் விவசாயிகள் நிறைந்த ஊர் தான் காவேரிக் கரையிலமைந்த அவர்களது அந்த அழகிய ஊர். காவிரியில் தண்ணீர் ஓடினால் இயற்கை எழில் கொஞ்சும் ஊர். காலை, மாலை இரு வேளைகளிலும் ஆற்றங்கரையிலுள்ள பல சிறு மரங்கள், மற்றும் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகொடிகள் புடைசூழ, சூரியன் உதிப்பதும் அஸ்தமிப்பதும் கண்கொள்ளாக் காட்சி. காவேரியில் நீர் ஓடவில்லை என்றால் அது ஒரு வரண்ட பூமி.

ஆற்றங்கரையில் ஒரு கோவிலும் அதனருகில் ஒரு அகலமான படித்துறையும் இருந்தன. அவ்வூர்ச் சிறுவர்கள் ஆற்று நீரினுள் கரையிலுள்ள பாறைகள் மீதிருந்தும் படித்துறையின் படிகளிலிருந்தும் சீறிப் பாய்ந்து நீந்தி விளையாடுவதும், ஊரிலுள்ள ஆண், பெண், சிறுவர், சிறுமியர் பலரும் அன்றாடம் ஆற்று நீரில் இறங்கி ஆனந்தமாய் நீராடுவதும் வழக்கம்.

"குணா, இமயமலை எங்கே இருக்கு? சொல்" என ஆசிரியர் கேட்க, "தெரியாது சார்" என்று குணா சொல்ல, "பென்ச் மேலே ஏறி நில்லு" என்றார் ஆசிரியர்.

"அப்போ தெரியுமா சார்" என்று குணா கேட்கவே வகுப்பில் பெரிய சிரிப்பொலி எழுந்தது.

ஆசிரியர் முறைக்கவே குணா தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான்.

களிமண்ணால் வீட்டில் செய்த பொருட்களைப் பள்ளிக்கு எடுத்துச் சென்று சக மாணாவர்களுக்குக் காட்டி மகிழ்வதில் குணாவுக்கு அலாதிப் பிரியம் உண்டு. ஒரு சிறிய தென்னங்குச்சியின் இரு முனைகளிலும் கோலிகுண்டு அளவிலான சிறு களிமண் உருண்டைகளை ஒட்டி, களிமண்ணாலான சிறு பீடம் ஒன்றைச் செய்து அதன் உச்சியில் ஒரு முள்ளைப் பதித்து, களிமண் உருண்டைகளுடன் கூடிய குச்சியின் மையப் பகுதியை அம்முள்ளின் மீது சமநிலையாக அமரச் செய்து குச்சியைச் சுற்றி விட்டால் அது களிமண் உருண்டைகளுடன் சேர்ந்து ராட்டினம் போல் சுற்றும். சுற்றிலும் அமர்ந்துள்ள சக மாணவர்கள் அதனை வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் சட்டைப் பைகளுக்குள் சிறு சிறு களிமண் உருண்டைகளைப் போட்டுவிடுவான் குணா. களிமண் காய்ந்து இருகி சட்டைப் பையைத் திறக்க முடியாமல் அவர்கள் திணறுவதைப் பார்ப்பதில் ஒரு சிறு மகிழ்ச்சி அவனுக்கு.

ஊரில் வருடந்தோறும் விநாயக சதுர்த்தி, நவராத்திரி முதலிய பண்டிகைகள் வந்தால் குணாவுக்கு ஒரே கொண்டாட்டம்தான். களிமண்ணைக் குழைத்து, அதைக்கொண்டு பிள்ளையார் முதலிய கடவுளர் உருவங்களும், செட்டியார் மற்றும் பிற ஆண், பெண் மனித உருவங்களும் ஆடு, மாடு, சிங்கம், புலி போன்ற விலங்குகள் உருவங்களும் செய்து மிகச்சொற்ப விலைக்கு விற்றுக் காசாக்கி விடுவான். அவ்வாறு ஈட்டிய பணத்தைத் தாயிடம் தந்து விடுவான். அவன் தாய் அப்பணத்தில் அவனுக்கும் மல்லிகாவுக்கும் பிடித்த துணிமணிகள் வாங்கித் தந்தது போக மீதமாவதைக் கொண்டு கணவனுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து, தனக்கும் எடுத்துக் கொள்வாள்.

குணா முறையாகப் படிக்காதது அவன் பெற்றோர்களுக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை. அவன் பெரும்பாலும் வீட்டிலிருக்கையில் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டும் களிமண்ணைக் கொண்டு அவளுக்கு பொம்மைகள் செய்து கொடுத்துக் கொண்டும் பொழுதைக் களிப்பான். மல்லிகா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் நன்றாகப் படிப்பவள். அத்துடன் இனிமையாகப் பாடுவாள். அவள் தேனினும் இனிய குரலில் உரக்கப் பாடம் படிப்பதையும் பாடுவதையும் கேட்டுப் பெற்றோர்களும் குணாவும் மிகவும் மகிழ்வர்.

குணா தட்டுத் தடுமாறி மூன்று வகுப்புகளில் இரண்டிரண்டு ஆண்டுகள் படித்த பின் ஒரு வழியாகப் பத்தாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்து, படிப்பதாகப் பாவனை செய்துகொண்டிருந்தான். பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்கள் மேலே படிக்க அடுத்திருந்த ஒரு சிறு நகருக்குத் தான் செல்ல வேண்டும். குணாவுக்கு பத்தாம் வகுப்பில் தேர்வோம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை, அவனது ஆசிரியர்களுக்கும் அவன் தேருவான் என்று தோன்றவில்லை.

பாதிக் கிணறு தாண்டிய கதையாய், தானும் தன் தகப்பனாரைப் போல கூலி வேலை செய்வதுதான் வழி என்று எண்ணிக் கொண்டிருந்தான் குணா. பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வும் வந்தது. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே குணாவைத் தவிர மற்றவர் அனைவரும் தேறிவிட்டனர். குணாவுக்குத் தான் பரிக்ஷையில் தேறாதது சிறிதளவு கவலையைத் தந்தாலும் அவன் மனதைத் தேற்றிக்கொண்டான்.

இந்நிலையில் அவர்கள் ஊரில் ஒரு சிவாலயம் கட்டுவதாக ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் கலந்து பேசி முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். கோவில் கட்ட இடம் தேர்வு செய்து கும்பகோணத்திலிருந்து ஒரு ஸ்தபதியை அழைத்து வந்து விரைவிலேயே ஆலயத் திருப்பணியைத் தொடங்கினார்கள்.

தொடரும் ....

Friday, May 28, 2010

தருமப்பிரபு

மஹாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்களான தருமபுத்ததிரன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் எனும் ஐவருள் தருமபுத்திரன் மூத்தவர். அவர் தரும தேவதையின் வரத்தினால் பிறந்தவர். தன்னிடம் யாசகம் கேட்டு வருவோர் யாவருக்கும் இல்லையென்று சொல்லாமல் அவர்கள் கேட்ட பொருளை ஈந்து தன் பெயருக்கேற்றவாறே தருமம் செய்வதில் சிறந்தவராக விளங்கினார்.

அவர் ஒரு சமயம் தான் செய்யும் தருமத்தைப் பற்றி மிகவும் பெருமையாக எண்ணிக்கொண்டாராம். அப்பொழுது அவரை சந்திக்க வந்த கிருஷ்ண பரமாத்மா அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாராம். கிருஷ்ண பகவான் கூப்பிடவும் மறு வார்த்தை சொல்லாமல் அவருடன் தருமர் சென்றாராம்.

கிருஷ்ணர் அவரை மாபலி சக்கரவர்த்தியின் இராஜ்யத்துக்கு அழைத்துச் சென்றாராம். இப்பயணத்தில் நெடுந்தூரம் நடந்து சென்றதால் தருமருக்கு தாகம் எடுக்கவே அருகிலிருந்த ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் அருந்த நீர் கேட்டாராம். அப்பெண் வீட்டினுள்ளே சென்று ஒரு தங்கத்தாலான செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாளாம். தண்ணீரை அருந்திய பின்னர் தருமர் அப்பெண்ணிடம் செம்பைத் திருப்பிக் கொடுக்க, அவள் திரும்ப வாங்க மறுத்து, ஒருவருக்குக் கொடுத்த பொருளைத் திருப்பி வாங்கும் பழக்கமில்லை என்று சொல்லவே, தானும் தானமாக யாரிடமும் எதையும் பெறும் வழக்கமில்லை என தருமர் சொன்னாராம். அப்படியானால் செம்பை வேறு யாருக்கேனும் கொடுங்கள் அல்லது தூக்கி எறிந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அப்பெண் வீட்டினுள் சென்று விட்டாளாம்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி எண்ணி மிகவும் அதிசயித்தவாறே தருமர் அங்கிருந்து கிருஷ்ணருடன் தொடர்ந்து சென்றாராம். இருவரும் மாபலிச் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைந்து சக்கரவர்த்தியை த்ரிசித்து அளவளாவுகையில் கிருஷ்ணர் மாபலியை நோக்கி, தன்னுடன் வந்துள்ளவர் தருமபுத்திரர் எனவும், அவர் தன்னிடம் யாசகம் கேட்டு வருவோர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர் எனவும் கூறவே, மாபலி வியந்து, அப்படியா! உங்கள் நாட்டில் இன்னமும் யாசகம் கேட்டு வருவோர் உள்ளனரா? எனது நாட்டில் அவ்வாறு வறுமை காரணமாகப் பிச்சையெடுப்போர் யாருமே இல்லை. என்று ஏளனமாகச் சொன்னாராம்.

இதைக் கேட்ட தருமர் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றாராம். அரசனாகத் தன் கடமையை ஒழுங்காகச் செய்யாததாலன்றோ தன் நாட்டில் பிச்சையெடுப்போர் இருக்கும் நிலை உருவாகியுள்ளதென உணர்ந்து ஆட்சி முறையைத் திருத்தி அமைத்தாராம்.

இக்கதை நமக்கு உணர்த்தும் நீதியாவது நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் யாரும் யாருக்கும் தருமம் செய்யவும் வேண்டாம் யாரிடமும் தருமம் பெறவும் வேண்டாம்.