Friday, May 28, 2010

தருமப்பிரபு

மஹாபாரதக் கதையில் வரும் பஞ்ச பாண்டவர்களான தருமபுத்ததிரன், பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் எனும் ஐவருள் தருமபுத்திரன் மூத்தவர். அவர் தரும தேவதையின் வரத்தினால் பிறந்தவர். தன்னிடம் யாசகம் கேட்டு வருவோர் யாவருக்கும் இல்லையென்று சொல்லாமல் அவர்கள் கேட்ட பொருளை ஈந்து தன் பெயருக்கேற்றவாறே தருமம் செய்வதில் சிறந்தவராக விளங்கினார்.

அவர் ஒரு சமயம் தான் செய்யும் தருமத்தைப் பற்றி மிகவும் பெருமையாக எண்ணிக்கொண்டாராம். அப்பொழுது அவரை சந்திக்க வந்த கிருஷ்ண பரமாத்மா அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்தாராம். கிருஷ்ண பகவான் கூப்பிடவும் மறு வார்த்தை சொல்லாமல் அவருடன் தருமர் சென்றாராம்.

கிருஷ்ணர் அவரை மாபலி சக்கரவர்த்தியின் இராஜ்யத்துக்கு அழைத்துச் சென்றாராம். இப்பயணத்தில் நெடுந்தூரம் நடந்து சென்றதால் தருமருக்கு தாகம் எடுக்கவே அருகிலிருந்த ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் அருந்த நீர் கேட்டாராம். அப்பெண் வீட்டினுள்ளே சென்று ஒரு தங்கத்தாலான செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாளாம். தண்ணீரை அருந்திய பின்னர் தருமர் அப்பெண்ணிடம் செம்பைத் திருப்பிக் கொடுக்க, அவள் திரும்ப வாங்க மறுத்து, ஒருவருக்குக் கொடுத்த பொருளைத் திருப்பி வாங்கும் பழக்கமில்லை என்று சொல்லவே, தானும் தானமாக யாரிடமும் எதையும் பெறும் வழக்கமில்லை என தருமர் சொன்னாராம். அப்படியானால் செம்பை வேறு யாருக்கேனும் கொடுங்கள் அல்லது தூக்கி எறிந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு அப்பெண் வீட்டினுள் சென்று விட்டாளாம்.

இந்நிகழ்ச்சியைப் பற்றி எண்ணி மிகவும் அதிசயித்தவாறே தருமர் அங்கிருந்து கிருஷ்ணருடன் தொடர்ந்து சென்றாராம். இருவரும் மாபலிச் சக்கரவர்த்தியின் அரண்மனையை அடைந்து சக்கரவர்த்தியை த்ரிசித்து அளவளாவுகையில் கிருஷ்ணர் மாபலியை நோக்கி, தன்னுடன் வந்துள்ளவர் தருமபுத்திரர் எனவும், அவர் தன்னிடம் யாசகம் கேட்டு வருவோர்க்கு இல்லை என்னாது வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர் எனவும் கூறவே, மாபலி வியந்து, அப்படியா! உங்கள் நாட்டில் இன்னமும் யாசகம் கேட்டு வருவோர் உள்ளனரா? எனது நாட்டில் அவ்வாறு வறுமை காரணமாகப் பிச்சையெடுப்போர் யாருமே இல்லை. என்று ஏளனமாகச் சொன்னாராம்.

இதைக் கேட்ட தருமர் வெட்கத்தால் தலைகுனிந்து நின்றாராம். அரசனாகத் தன் கடமையை ஒழுங்காகச் செய்யாததாலன்றோ தன் நாட்டில் பிச்சையெடுப்போர் இருக்கும் நிலை உருவாகியுள்ளதென உணர்ந்து ஆட்சி முறையைத் திருத்தி அமைத்தாராம்.

இக்கதை நமக்கு உணர்த்தும் நீதியாவது நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் யாரும் யாருக்கும் தருமம் செய்யவும் வேண்டாம் யாரிடமும் தருமம் பெறவும் வேண்டாம்.